மத்திய ஆயுதப்படைகள் (CAPF) எனப்படும் மத்திய கட்டுப்பாட்டிலுள்ள படைகளில் உயர் தலைமையகப் பதவிகளை ஐபிஎஸ் அதிகாரிகளே வகிப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், ஐடிபிபி, எஸ்எஸ்பி மற்றும் பிஎஸ்எப் ஆகிய படைகளில், களத்தில் பணியாற்றும் அதிகாரிகள் உயர்பதவிகளுக்கு செல்ல முடியவில்லை என்ற அதிருப்தி நீண்ட காலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. காரணமாக, உயர் பதவிகளில் பெரும்பாலும் ஐபிஎஸ் அதிகாரிகளே நியமிக்கப்படுவது குறிப்பிடப்படுகிறது.
இதனால் களப்பணியில் உள்ள அதிகாரிகளுக்கும், நிர்வாக உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் இடையே உரசல் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பின்னணியில், தற்போதுள்ள நடைமுறையை சட்ட வடிவில் உறுதிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.
இதற்கான வரைவு மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார். புதிய சட்டத்தில் பணி நியமனம், பதவி உயர்வு மற்றும் பதவிகளுக்கான கட்டமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
வரைவு மசோதாவில் கூடுதல் இயக்குநர் ஜெனரல், சிறப்பு இயக்குநர் ஜெனரல் மற்றும் இயக்குநர் ஜெனரல் பதவிகளில் 67% வரை ஐபிஎஸ் அதிகாரிகளுக்கே ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதேபோல் ஐஜி பதவிகளில் 50% வரை ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்பு டிஐஜி பதவிகளுக்கு 20% வரை ஐபிஎஸ் ஒதுக்கீடு என இருந்தது; புதிய சட்டத்தில் அந்த டிஐஜி ஒதுக்கீடு முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




