புதுடில்லி: மேற்காசியாவில் போர் நீடித்து வரும் நிலையில், உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் தடங்கல் ஏற்படும் அபாயம் குறித்து கவலை அதிகரித்துள்ளது. பல நாடுகளில் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 23 நாட்களாக தொடர்கிறது. இதன் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதாக கூறப்படுவதால், உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் சரக்குப் போக்குவரத்தில் சிக்கல் உருவாகியுள்ளது.
இந்தச் சூழல் நீடித்தால் இந்தியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மூத்த அமைச்சர்களுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனையில் பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் நிலவரத்தை பிரதமர் ஆய்வு செய்தார்.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் சரக்கு கப்பல்கள் குறைந்துள்ளதால், அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளதாக செய்தி கூறுகிறது.




