சென்னை: சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவதாக அறிவித்த பின்னரும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதாகக் கூறி, ஓய்வூதியர்கள் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 24-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.2,000-இல் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தப்படும் என்றும், பணிக்கொடை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார். மேலும் ஈமச்சடங்கு செலவுக்காக ரூ.20,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கான அரசாணை பிப்ரவரி 13-ம் தேதி வெளியானதால், மார்ச் மாதம் முதல் உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் என ஓய்வூதியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சமூக நலத்துறை சார்பில் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகாததால், உயர்வு நடைமுறைக்கு வருவதில் இழுபறி ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்க முடியும்; புதிய திட்டங்களுக்கு நிதி பெற முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதனால் மார்ச் மாதத்திற்கும் வழக்கம்போல் ரூ.2,000 மட்டுமே கிடைத்ததாக தெரிவித்தனர்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், அரசாணையில் அமல்படும் தேதி குறிப்பிடப்படாததே குழப்பத்திற்குக் காரணம் என்றும், தேர்தல் முடியும் வரை ஓய்வூதிய உயர்வு சாத்தியமற்றதாகத் தெரிகிறது என்றும் கூறி, அரசு தங்களை நம்ப வைத்து ஏமாற்றியதாக குற்றஞ்சாட்டினர்.