தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலேயே தொடர காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) உடன் கூட்டணி அமைக்க மாநில அளவில் சில தலைவர்கள் விரும்பினாலும், இறுதியில் அந்த முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

கட்சிக்குள், இந்த முடிவுக்கு ராகுல் காந்தி முழுமையாக உடன்படவில்லை என்றும், த.வெ.க. உடன் கூட்டணியை அவர் விரும்பியதாகவும் பேசப்படுகிறது. ஆனால், சோனியா காந்தியின் அறிவுறுத்தலுக்கு இணங்கி அவர் அமைதியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி குறித்து ராகுல் இதுவரை வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் த.வெ.க. மற்றும் காங்கிரஸ் இடையே “மறைமுக புரிதல்” ஏற்படலாம் என்ற பேச்சும் காங்கிரஸ் வட்டாரங்களில் உலவுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி த.வெ.க. உடன் பேசி வருவதாகவும், அவர் முன்பே தி.மு.க. வேண்டாம்; த.வெ.க. உடன் கூட்டணி வேண்டும் என்று வலியுறுத்தியவர் என்றும் கூறப்படுகிறது.

இந்த பின்னணியில், தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்காக ராகுல் தீவிரமாக பிரசாரம் செய்வாரா என்பது சந்தேகமே என சிலர் கூறுகின்றனர். சோனியாவின் கட்டளைக்கு இணங்கி வந்தாலும், ஒன்று அல்லது இரண்டு கூட்டங்களுக்கு மேல் அவர் வர வாய்ப்பில்லை என்றும் பேசப்படுகிறது.

மேலும், கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை மீட்டெடுக்க ராகுல் விரும்பினாலும், தற்போதைய சூழலில் அது சாத்தியமா என்ற சந்தேகம் அவருக்கே இருப்பதாக தகவல் கூறுகிறது. தமிழகத்தில் விஜயுடன் கூட்டணி அமைந்தால், கேரளா பிரசாரத்திற்கும் அவரை பயன்படுத்தலாம் என்று அவர் எண்ணியிருந்ததாகவும், தற்போது கேரளாவில் மீண்டும் இடதுசாரிகளுக்கே வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.