புதுடில்லி: அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் (USCIRF) வெளியிட்ட அறிக்கை “உள்நோக்கம் கொண்டது” என்றும் “பாரபட்சமானது” என்றும் 275 ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் கூட்டறிக்கையில் கடுமையாக கண்டித்துள்ளனர்.

உலகளவில் மத சுதந்திர நிலையை கண்காணித்து அமெரிக்க அரசுக்கு கொள்கை பரிந்துரைகள் வழங்கும் USCIRF, 2025-க்கான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்தியாவில் மத சுதந்திர மீறல்கள் நடக்கின்றன என கூறி, இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ‘ரா’ மற்றும் ஆர்.எஸ்.எஸ். மீது தடை விதிக்க வேண்டும் என பரிந்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு ஏற்கனவே இதை கண்டித்த நிலையில், கூட்டறிக்கையில் கையெழுத்திட்டவர்கள், இந்த அறிக்கை தவறான கணக்கீடுகளையும் அறிவுசார் குறைபாடுகளையும் வெளிப்படுத்துகிறது என கூறினர். ஆர்.எஸ்.எஸ். சொத்துகளை முடக்குவது, அதன் உறுப்பினர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது போன்ற பரிந்துரைகள் “பாரபட்சமானவை” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

உரிய ஆதாரங்கள் இல்லாமல் இந்திய நிறுவனங்களை சீர்குலைக்க முயலும் போக்கு இதில் இருப்பதாகவும், அறிக்கையை தயாரித்தவர்களின் பின்னணியை அமெரிக்க அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் கூட்டறிக்கை வலியுறுத்தியது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு; வலுவான நீதித்துறை மற்றும் பார்லிமென்ட் கண்காணிப்பு உள்ளது; மத உரிமை மீறல்கள் ஏற்பட்டால் சட்ட வழிகளில் கேள்வி எழுப்ப போதுமான வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ். போன்ற சமூக-கலாசார அமைப்புகள் தேச கட்டமைப்பு மற்றும் சமூக சேவையில் ஈடுபடுகின்றன; விமர்சனங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும், அவதூறாக இருக்கக் கூடாது என்றும் கூறினர். இந்த அறிக்கை இந்தியா–அமெரிக்க உறவுகளில் விரிசலை உருவாக்க முயலும் சில “மறைமுக சக்திகளின்” வேலை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த கூட்டறிக்கையில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், ஹேமந்த் குப்தா, முன்னாள் தேர்தல் ஆணையர்கள் ஓ.பி. ராவத், சுனில் அரோரா, முன்னாள் வெளியுறவு செயலர் கன்வல் சிபல் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.