ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களை கடுமையாக கண்டித்த சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம், ஈரான் தூதரகத்தைச் சேர்ந்த 5 ஊழியர்கள் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும், தாக்குதல்கள் தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் முன்பே எச்சரித்திருந்தார். இருப்பினும் தாக்குதல்கள் தொடர்ந்ததாக சவுதி தரப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், ராணுவத் தூதர் உட்பட 5 பேரை ‘விரும்பத்தகாத நபர்கள்’ (persona non grata) என அறிவித்து, வெளியேற 24 மணி நேர அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
ஈரானின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தையும், ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானங்களையும் வெளிப்படையாக மீறுவதாகவும், இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் முரணானதாகவும் சவுதி தெரிவித்துள்ளது.
தன் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து முக்கிய நடவடிக்கைகளையும் எடுப்பதாக சவுதி கூறி, தாக்குதல்கள் தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும், தற்போதும் எதிர்காலத்திலும் தூதரக உறவுகள் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.




