சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.கோட்டை சோதனைச் சாவடியில் மார்ச் 22 அதிகாலை நடந்த வாகன சோதனையில் ரூ.4.51 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நிலையான கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த கல்லல் பி.டி.ஓ. பாலமுருகன் தலைமையில் சோதனை நடைபெற்றது.

அப்போது காரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்க கட்டிகள் எடுத்துச்செல்லப்படுவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், மதுரையைச் சேர்ந்த மாயாண்டி மகன் கார்த்திகேயன் என்பவர் காரில் தங்க கட்டிகளுடன் சென்றபோது சோதனையில் சிக்கியதாக தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகள் திருப்பத்தூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.