புதுடில்லி: நவீன காலத்தில் கையில் மொபைல் போன் வைத்திருக்கும் பலரும் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு ‘ஊடகவியலாளர்’ போல் செயல்படுவது, நியாயமான விசாரணைக்கு பெரிய சவாலாக மாறுகிறது என சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது.

ஹேமேந்திர படேல் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சம்பவம் நடந்த உடனே சந்தேகநபர்களை கைது செய்து அவர்களின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது மக்கள் மனதில் ஒருதலைபட்சமான கருத்தை உருவாக்கக்கூடும் என்றும், கைதானவரின் கண்ணியத்தையும் பாதிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டது.

தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் விபுல் எம். பன்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஊடகங்களுக்கு தகவல் வழங்கும் போது போலீசார் எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது என தெரிவித்தது. ஒருதலைபட்ச விளக்கங்கள், குற்றஞ்சாட்டப்பட்டவரே குற்றவாளி என்ற பிம்பத்தை உருவாக்கும் அபாயம் இருப்பதாகவும், குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளியோ நிரபராதியோ அல்ல என்பதையும் நீதிமன்றம் நினைவூட்டியது.

போலீசாரை கட்டுப்படுத்த கையேடுகள் உள்ளன; தொலைக்காட்சிகளும் பொதுவாக கட்டுக்கோப்புடன் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்துவது கடினம் என்றும், சிலர் தனலாபத்திற்காகவும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவும் வாகனங்களில் ‘ஊடகவியலாளர்’ ஸ்டிக்கர் ஒட்டி வலம் வருவது பற்றியும் அமர்வு சுட்டிக்காட்டியது.

ஊடகங்களை போலீசார் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) உருவாக்க மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. ஏப்ரலில் வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரும் நிலையில், போலீஸ்–ஊடகம்–சமூக வலைதளங்கள் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய விரிவான மனுவை ஏப்ரலுக்குப் பின் தாக்கல் செய்தால் சிறப்பாக இருக்கும் என கூறியதைத் தொடர்ந்து, மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றார்.