உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில், ராணுவ முகாம்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களை ரகசியமாக படம் பிடித்து வெளிநாட்டினருக்கு அனுப்ப உதவியதாக 5 சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கவுசாம்பி பகுதியில் வசிக்கும் சிலர், நாட்டின் முக்கிய இடங்களை பதிவு செய்து வெளிநாட்டு நபர்களுக்கு அனுப்புவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, மார்ச் 15-ம் தேதி நடந்த சோதனையில் ஒரு பெண் உட்பட 6 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடந்த விசாரணையில் மேலும் பலர் தொடர்பில் இருப்பது தெரிய வந்ததால், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியுடன் சந்தேக நபர்களின் மொபைல் போன்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, நேபாளத்தின் குல்மி மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் (20), பீஹாரின் புர்னியாவைச் சேர்ந்த விவேக் (18), மீரட்டைச் சேர்ந்த ககன் குமார் பிரஜபாதி (22), ஜான்பூரைச் சேர்ந்த துர்கேஷ் நிஷாத் (26) மற்றும் 5 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காஜியாபாத் கூடுதல் போலீஸ் கமிஷனர் ராஜ் கரண் நாயர் கூறுகையில், இந்த கும்பலின் முக்கிய ஒருங்கிணைப்பாளராக கூறப்படும் சுஹைல் மாலிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டதாகவும், அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தற்போது மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பீஹாரைச் சேர்ந்த நவுஷத் அலி மற்றும் பாஹல்பூரைச் சேர்ந்த சமீர் ஆகிய இருவரை தேடி வருவதாக போலீசார் கூறினர்.
விசாரணையில், டில்லி கன்டோன்மென்ட் மற்றும் ஹரியானாவின் சோனிபட் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சூரிய சக்தியில் இயங்கும் ரகசிய சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்ததாகவும், அதில் பதிவான காட்சிகளை தனிப்பட்ட மொபைல் செயலி மூலம் வெளிநாட்டிலுள்ள ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பியதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இதை விரிவுபடுத்த திட்டமிட்டிருந்ததாகவும், குடும்ப உறுப்பினர்களின் பயன்படுத்தப்படாத சிம் கார்டுகளை வழங்கி வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் செயல்பட்டதாகவும், நிதி பரிவர்த்தனைகள் ரகசியமாக நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் கூடுதல் தொடர்பாளர்களை கண்டறிய தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.




