புதுடில்லி: ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்களை முடக்க வேண்டும்; அப்படி முடக்கப்பட்டால் அந்த சாதனத்தில் இருந்து மீண்டும் புதிய வாட்ஸ்அப் கணக்கை தொடங்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வாட்ஸ்அப்புக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்த விவகாரம், கடந்த ஆண்டு டிசம்பரில் அமைக்கப்பட்ட துறைகளுக்கு இடையேயான உயர்மட்ட குழுவின் மூன்றாவது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. டில்லியில் நடந்த அந்த கூட்டத்தில் வாட்ஸ்அப் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று விரிவான ஆலோசனையில் ஈடுபட்டனர்.
உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவரின் தகவலின்படி, பயனர் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் போலீஸ் விசாரணைகளுக்கு உதவுவது உள்ளிட்ட பல உறுதிமொழிகளை வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. மேலும், மோசடிகளில் பயன்படுத்தப்படும் மொபைல் போன், லேப்டாப் போன்ற சாதனங்களை முடக்கும் திட்டம் குறித்து 45 நாட்களுக்குள் முன்மொழிவை சமர்ப்பிக்க வாட்ஸ்அப்பிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வாட்ஸ்அப்பில் நீண்ட நேரம் தொடரும் மோசடி அழைப்புகளை கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்பு முறைகள் உருவாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ‘ஸ்கைப்’ போன்ற செயலிகளில் இருப்பதைப் போல, தெரியாத நபர்களிடமிருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகள் குறித்து பயனருக்கு எச்சரிக்கை வழங்க வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் போலீஸ் அதிகாரி போல நடித்து வரும் வீடியோ அழைப்புகளை கண்டறிந்து பயனருக்கு தெரிவிக்கும் வசதியையும் பரிசீலிக்க வேண்டும் என்றும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.




