சென்னை: வரவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியில் (தே.ஜ.கூட்டணி) அ.ம.மு.க.க்கு குறைந்தது 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் ஏப்.23 அன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் தினகரன் டெல்லியில் நேற்று முன்தினம் அமித் ஷாவை சந்தித்து பேசினார். மேலும் தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்புகளில், தே.ஜ.கூட்டணியில் அ.ம.மு.க.க்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தினகரன் முன்வைத்ததாகவும், குறிப்பாக குறைந்தது 12 தொகுதிகள் வேண்டும் என கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அ.ம.மு.க. வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் தேனி மற்றும் திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் அ.ம.மு.க. போட்டியிட்டது. தென் மாவட்டங்களில் அக்கட்சிக்கு கணிசமான ஓட்டு வங்கி இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க. தலைமை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் அ.ம.மு.க. வட்டாரங்கள் கூறின.




