புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகள் இன்னும் முழுமையாக தீராத நிலையில், தேமுதிகவும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என கட்சித் தலைவர் பிரேமலதா அறிவித்துள்ளார். இதனால் கூட்டணிக்குள் உள்ள அழுத்தம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. என்ஆர் காங்கிரஸ்–பாஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவாகி, என்ஆர் காங்கிரஸ் 16, பாஜ 10, அதிமுக 2, லஜக 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, இண்டி கூட்டணியில் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெறும் சூழலிலும் இழுபறி நீடித்ததாக கூறப்படுகிறது.
நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இண்டி கூட்டணியில் காங்கிரஸ் 16, திமுக 12, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா ஒரு இடம் என ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சீட் மறுக்கப்பட்டதாக கூறி, மாநில தலைவர் வைத்திலிங்கம் வீட்டு வாசலில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடிவு செய்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த கட்சி 2 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு தேமுதிக போட்டியிடும் முடிவை எடுத்ததாக பிரேமலதா தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர், புதுச்சேரியில் திமுக–காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறினார். தேமுதிக சார்பில் யார் போட்டியிடுவர் என்பது மாலை 3 மணிக்கு தெரிய வரும் எனவும் அவர் தெரிவித்தார்.




