வாக்காளர்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், ஓட்டுச்சாவடிகளில் புதிய ஏற்பாடுகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது. வரிசையில் காத்திருப்போருக்கு அமர்வதற்காக இடைவெளிகளில் பெஞ்ச்கள் அமைக்கப்படுவதுடன், நுழைவாயிலுக்கு வெளியே மொபைல் போன்களை வைக்க தனி அறை வசதியும் ஏற்படுத்தப்படும்.
தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், குடிநீர், காத்திருப்பு பகுதி, கழிப்பறை, போதிய வெளிச்சம் ஆகிய அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சாய்வு தளம், தரமான ஓட்டுப்பதிவு அறை மற்றும் தெளிவான வழிகாட்டி பலகைகளும் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சுவரொட்டிகள் வைக்கப்படும். இதில் ஓட்டுச்சாவடி விவரங்கள், வேட்பாளர் பட்டியல், வாக்காளர்கள் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும், ஓட்டுப்பதிவு நடைமுறை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும்.
மேலும், வாக்காளர்கள் தங்களின் ஓட்டுச்சாவடி எண் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண்ணை எளிதில் கண்டறிய, ஒவ்வொரு ஓட்டுச்சாவடி அமைவிடத்திலும் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்படும்; அவற்றை எளிதில் அறிய வழிகாட்டி பலகைகளும் வைக்கப்படும். மொபைல் வைப்பு அறை வசதியின் கீழ், வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்குள் நுழைவதற்கு முன் மொபைல் போனை அணைத்து, அங்கு நியமிக்கப்பட்ட தன்னார்வலரிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.




