சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), அதிமுக தலைவர்கள் டெல்லி சென்றால் அதைப் பயன்படுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டினார். இது தோல்வி பயத்தால் உருவான அச்சம் என்றும் அவர் கூறினார்.
பாஜக, அமமுக, பாமக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் பேசிய இபிஎஸ், பேச்சுகள் சுமூகமாக முடிந்ததாக தெரிவித்தார். மேலும் சில கட்சிகளுடன் பேச்சு தொடர்வதாகவும், இன்று இரவுக்குள் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்து எத்தனை தொகுதிகள் என அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
அதிமுக தலைமையிலான கூட்டணி உணர்வுப்பூர்வமாக அமைந்த “வெற்றி கூட்டணி” என அவர் வர்ணித்தார். 210 தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெறும்; அதிக தொகுதிகளில் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக கூட்டணியைப் பற்றி பேசும்போது, காங்கிரஸ்-திமுக இடையே 20 நாட்களாக பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அந்த காலத்தில் “வார்த்தைப் போர்” நடந்ததாகவும் இபிஎஸ் கூறினார். மார்க்சிஸ்ட், விசிக உள்ளிட்ட சில கட்சிகளுக்கு இன்னும் இறுதி முடிவு இல்லை என்றும், கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் பெற்றவர்கள் இப்போது 5 தொகுதிக்காக “அலையோ அலை” என அலைகிறார்கள் என்றும் கிண்டல் செய்தார்.
மேலும், கனிமொழி ஏன் டெல்லி சென்றார், காங்கிரஸ் தலைவரை ஏன் சந்தித்தனர், சந்திப்புக்குப் பிறகு ஏதேனும் முடிவு வந்ததா என கேள்வி எழுப்பினார். கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை நடத்துவது இயல்புதான் என்றாலும், திமுக கூட்டணியில் இழுபறி நீடிப்பது அவர்களுக்குள் உள்ள குழப்பத்தை காட்டுகிறது என்றும் அவர் விமர்சித்தார்.




