திருநெல்வேலி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் போன்றோர் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது அறிக்கையில், அந்த விவசாயி சுமார் ஆறு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதாகவும், நேற்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், பாதிக்கப்பட்டவரின் 23 வயது மகள் தற்கொலை செய்துகொண்டதாக வரும் தகவல் அதிர்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
சம்பவத்தைத் தொடர்ந்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியானதாக இபிஎஸ் தெரிவித்தார். திமுக ஆட்சியில் குற்றங்கள் தடுக்கப்படவில்லை என்றும், குற்றவாளிகளுக்கு ஆளுங்கட்சி தொடர்பு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
வேங்கைவயல், நாங்குநேரி போன்ற சம்பவங்களை நினைவூட்டி, விளிம்புநிலை மக்களின் நிலை குறித்து இந்த நிகழ்வு சாட்சியாக இருப்பதாக இபிஎஸ் கூறினார். காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், நிரந்தர தீர்வு மக்களின் வாக்கில்தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.




