டெஹ்ரான்: ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் போர் எதிர்ப்பாக கூறியதாக குறிப்பிடப்படும் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி ஈரான் ஏவியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல்-ஈரான் போர் 24 நாட்களாக நீடித்து வருகிறது. வளைகுடா பகுதிகளில் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியதாக கூறப்படும் நிலையில், பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வந்து சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தை சீராக்க வேண்டும் என பல நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகின்றன. ஆனால், இந்தப் போர் தொடர்பாக அமெரிக்காவும் ஈரானும் தங்களது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஈரான் ஊடகங்களின் தகவலின்படி, ஏவுகணைகளில் சான்செஸின் புகைப்படத்துடன், “இந்தப் போர் சட்டவிரோதமானது மட்டுமல்ல, மனிதநேயமற்றதும்” என்ற பொருளில் ஆங்கிலம் மற்றும் பாரசீக மொழிகளில் அச்சிடப்பட்ட வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா கோரியதாக கூறப்படும் ரோட்டா கடற்படைத் தளம் மற்றும் மோரோன் விமானத் தளத்தை வழங்க ஸ்பெயின் மறுத்த பின்னணியிலும் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. அந்த மறுப்பைத் தொடர்ந்து ஸ்பெயினுடனான வர்த்தக உறவுகளை துண்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




