ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள குடும்ப நல நீதிமன்றம், 2016ல் 12 வயதில் நடத்தப்பட்ட திருமணத்தை குழந்தை திருமண தடை சட்டம்–2006ன் கீழ் செல்லாது என அறிவித்து, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கியுள்ளது.
வழக்கு விவரங்களின்படி, பிஷ்னோய் சமூகத்தில் குடும்பத்தில் மரணம் நிகழ்ந்த பின் நடத்தப்படும் “மவுசர்” எனப்படும் சடங்கின் போது, உறவுச் சுற்றத்தில் உள்ள பல குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பெற்றோர் மற்றும் சமூக கட்டமைப்பு காரணமாக தன்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய வைத்ததாகவும், வயது வந்த பின்னர் கணவருடன் சேர்ந்து வாழ பெற்றோர் மற்றும் புகுந்த வீட்டார் தரப்பில் தொடர்ந்து அழுத்தம் ஏற்பட்டதாகவும் அந்த இளம் பெண் தெரிவித்தார். இதனால், விருப்பமில்லாத வாழ்க்கையிலிருந்து விடுபட சட்ட உதவி நாடினார்.
ஜோத்பூரில் செயல்படும் சாரதி சமூக அறக்கட்டளையின் உதவியுடன் அவர் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார். விசாரணையில் பெற்றோர், புகுந்த வீட்டினர் உள்ளிட்ட பல தரப்பினரிடம் விளக்கம் பெறப்பட்டதுடன், திருமணம் நடந்தபோது சிறுமியின் வயதை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நடந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குழந்தை திருமணம் குழந்தைகளின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதிப்பதாகவும், அதை ஒழிக்க சமூகத்தின் கூட்டு முயற்சி தேவை என்றும் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திருமணம் செல்லாது என அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, ஏழாம் வகுப்புடன் நிறுத்திய படிப்பை திறந்தவெளி பள்ளி வழியாக மீண்டும் தொடர அவர் தயாராகி வருகிறார்.




