தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்கு பின் கொல்லப்பட்ட பிளஸ் 2 மாணவியின் குடும்பத்தினரை தி.மு.க. துணை பொதுச்செயலர் கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

சந்திப்பின்போது, குடும்பத்துக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதி அளித்த அவர், உயிரிழந்த மாணவியின் சகோதரியின் கல்விச்செலவுக்கும் வேலைவாய்ப்பு தொடர்பான உதவிகளுக்கும் ஆதரவு வழங்கப்படும் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, போலீசார் விரைந்து செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்தார். இது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஓரளவு நிம்மதியை அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும்; உச்சபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும் என கனிமொழி கூறினார். பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் சட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.