புதுடில்லி: மேற்காசியாவில் நடைபெறும் போரால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைக்க, அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுக் கூட்டம் நடைபெற்றது. தற்போதைய சூழல், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் துறைகள் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரவை செயலர் விரிவாக விளக்கமளித்தார்.

இந்தக் கூட்டத்தில் விவசாயம், ரசாயனம், உணவு பாதுகாப்பு, பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி, ஏற்றுமதி, சிறு-குறு தொழில்கள், கப்பல் போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் விநியோக சங்கிலி ஆகிய துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உலகளாவிய பொருளாதாரத்தில் குறுகிய காலம் மற்றும் நீண்ட கால தாக்கங்கள் ஏற்படலாம் என்பதையும், இந்தியா பாதிக்கப்படாமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகளையும் குழு பரிசீலித்தது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, அனைத்து மின் நிலையங்களிலும் நிலக்கரி கையிருப்பு போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்து, மின்சாரப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. ரசாயனம், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட தொழில்துறை தேவைகளுக்கான இறக்குமதியை பல நாடுகளிலிருந்து மேற்கொள்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்தியப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்றுமதிக்கான புதிய இலக்குகள் அமைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், பொதுமக்களுக்கு இடையூறு குறைய அமைச்சர்கள் மற்றும் துறைகள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். அத்தியாவசியப் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுதல் அல்லது பதுக்கப்படுதல் போன்றவற்றைத் தடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படவும் கூறப்பட்டுள்ளது. சூழல் வேகமாக மாறி வரும் நிலையில், மோதலின் விளைவுகளிலிருந்து மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.