மேற்காசியாவில் நீடிக்கும் மோதல் உலகளவில் பெரும் கவலைக்குரியது; அது உலகப் பொருளாதாரத்தையும் இந்தியாவையும் பாதிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் தெரிவித்தார். இந்தச் சூழல் பாதுகாப்புக்கும் மனிதநேய நடவடிக்கைகளுக்கும் பெரிய சவாலாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

போர் பாதிப்பு பகுதிகளில் வாழும் இந்தியர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கி வருவதாக மோடி கூறினார். மோதல் தொடங்கிய பின்னர் 3.75 லட்சம் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளதாகவும், ஈரானிலிருந்து சுமார் ஆயிரம் பேர் திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் பணியாற்றுவதாகவும், மோதல் காரணமாக சிலர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேற்காசியாவிலிருந்து கச்சா எண்ணெய் தேவையின் முக்கிய பகுதி பூர்த்தி செய்யப்படுவதால், பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்தியாவிற்கு வரும் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருவதால், எரிபொருள் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் கடல் வழித் தடங்களை உன்னிப்பாக கண்காணிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மோடி தெரிவித்தார். பெட்ரோலில் எத்தனால் கலப்பு தற்போது 20% ஆக இருப்பதால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளதாகவும், 53 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

போரால் ஏற்படும் தாக்கங்களை மத்திய அமைச்சர்கள் குழு தொடர்ந்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிப்பதாகவும், அதன்படி தினசரி முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் மோடி கூறினார். வரும் சாகுபடி காலத்துக்கான உரம் போதுமான அளவில் இருப்பதாகவும், ரயில்கள் மின்சார இயக்கம் மற்றும் மின்சார வாகன பயன்பாடு அதிகரிப்பதால் டீசல் பயன்பாடு குறைவதாகவும் அவர் தெரிவித்தார்.