ஓமன் நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் கார் சிக்கியதில், கேரளாவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக பாலக்காட்டில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்கள் பாலக்காடு மாவட்டம் திருத்தாலாவைச் சேர்ந்த ஷம்லா (32) மற்றும் யூசுப் (38). ஷம்லா, ஓமனில் உள்ள ‘இன்காஸ்’ அமைப்பின் தலைவரான லுபிஷாத்தின் மனைவி. யூசுப் ஓமனில் வியாபாரம் செய்து வந்தார்.

ரம்ஜான் விடுமுறையை கொண்டாடுவதற்காக யூசுப் மற்றும் லுபிஷாத்தின் குடும்பத்தினர் ஒரே காரில் ஓமனின் பர்கா சுற்றுலா தலத்திற்கு சென்று திரும்பியபோது இந்த சம்பவம் நடந்தது.

திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் கார் சிக்கியதால் ஷம்லா மற்றும் யூசுப் உயிரிழந்தனர். ஷம்லாவின் தாயார் ரம்லா வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

காரில் மொத்தம் ஒன்பது பேர் பயணம் செய்தனர். அவர்களில் நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிர் தப்பினர்.