புதுடில்லி: பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) உள்ளக மோதல் தொடர்பான வழக்கில், கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் “மாம்பழத்தை பிழிந்து ஜூஸ் எடுத்து விடாதீர்கள்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி சூர்யகாந்த் கருத்து தெரிவித்தார்.
பாமக “மாம்பழம்” சின்னத்தை தேர்தல் கமிஷன் அன்புமணிக்கு ஒதுக்கியதை எதிர்த்து ராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கட்சிக்குள் பிரச்னை ஏற்பட்டால் சின்னத்தை முடக்கி வைப்பதே நடைமுறை என்றும், குலுக்கல் முறையும் பின்பற்றப்படவில்லை என்றும் ராமதாஸ் தரப்பு வாதிட்டது.
அன்புமணி தரப்பில், தேர்தல் கமிஷனிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தங்களுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் “பிரெண்ட்லி மேட்ச்” ஆடுவது போல இருப்பதாக குறிப்பிட்டார். மேலும், மாம்பழம் சின்னம் தொடர்பாக உடனடியாக சிவில் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தி, அந்த மனுவை மூன்று நாட்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க சிவில் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.




