புதுடில்லி: மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவுக்கு செல்ல வேண்டிய ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று நடுவழியில் பாதை மாற்றி இந்தியாவை வந்தடைந்துள்ளது.
ரஷ்ய கச்சா எண்ணெயை ஏற்றிய ‘அக்வா டைட்டன்’ சரக்கு கப்பல், சீனாவின் ரிஷாவ் துறைமுகத்துக்குச் செல்லும் வழியில் தென் சீனக் கடல் பகுதியில் திடீரென தன் பாதையை மாற்றி, கர்நாடகாவின் நியூ மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்ததாக தகவல். இதேபோல் மேலும் ஆறு ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்கள் விரைவில் இந்தியாவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து பிப். 28 முதல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதும், அதற்கு ஈரான் பதிலடி கொடுப்பதும் காரணமாக மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதாகவும், இதனால் இந்தியா உட்பட பல நாடுகளில் எரிபொருள் மற்றும் தொடர்புடைய விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மத்திய அரசு ஈரான் அரசுடன் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து, இந்திய தேசியக் கொடி ஏந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதி வழங்கப்பட்டதாக செய்தி குறிப்பிடுகிறது. அந்த வழியாக சமையல் எரிவாயு ஏற்றி வந்த ‘நந்தா தேவி’, ‘சிவாலிக்’ ஆகிய கப்பல்கள் சமீபத்தில் இந்தியா வந்தடைந்தன.
மேலும், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து 16,714 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த ‘பிக்சிஸ் பயனீர்’ கப்பலும் நியூ மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதே நேரத்தில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்ய கச்சா எண்ணெயை அதிக அளவில் முன்பதிவு செய்துள்ளதாகவும், கஜகஸ்தானின் கச்சா எண்ணெயை ஏற்றி வரும் ‘சூசு என்’ கப்பல் விரைவில் குஜராத்தின் சிக்கா துறைமுகத்துக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




