தமிழகத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் வழக்கில் இன்று (மார்ச் 23) மாலை 4 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை வழங்குகிறார்.
2020ஆம் ஆண்டு சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் விசாரணையின் போது கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி விசாரணையில் இருந்து பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பால கிருஷ்ணன், ராகு கணேஷ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
சிபிஐ தரப்பில் 105 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, சுமார் 400 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மதுரை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
அனைத்து விசாரணைகளும் வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று மாலை நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க உள்ளது.




