ரியாத் கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், ஈரானுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவுதி அரேபியா அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 2025-ல் கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை சவுதி தரப்பு நினைவூட்டுவதாக கூறப்படுகிறது.
சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் நெருங்கிய நட்பு நாடுகள். அந்த ஒப்பந்தத்தின் படி, இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது தாக்குதல் நடந்தால், அது மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாகவும் கருதப்படும். சவுதி மீது ஈரான் தாக்குதல் நடத்துவதாக கூறப்படும் சூழலில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் பதிலடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சவுதி அரசின் விருப்பமாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைப்பாட்டை சவுதி அரசின் உயர்மட்ட தலைவர்கள் சமீபத்தில் கனடா செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக கூறியதாகவும் தகவல் தெரிவிக்கிறது. இதனால் பாகிஸ்தானுக்கு அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியாக பெரிய சிக்கல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், பாகிஸ்தானில் 3 கோடிக்கும் மேற்பட்ட ஷியா முஸ்லிம்கள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. பாகிஸ்தான் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் உள்நாட்டில் கலவரம் வெடிக்கும் அபாயம், ஏற்கனவே பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேலும் மோசமடையும் நிலை, மேலும் இரு நாடுகளும் பகிரும் சுமார் 900 கி.மீ. எல்லை வழியாக பதிலடி தாக்குதல் அபாயம் ஆகியவை கவலையை அதிகரிக்கின்றன.
இந்த பின்னணியில், ஒப்பந்தத்தை முன்னிறுத்தாமல் பாகிஸ்தான் தற்போது பக்கவாட்டில் இருந்து நிலைமையை மட்டும் கவனித்து வருவதாக அந்த தகவல் கூறுகிறது.




