மத்திய அரசு ஒதுக்கிய பேரிடர் நிவாரண நிதியை கேரள அரசு இதுவரை பயன்படுத்தவில்லை என்றும், அந்தத் தொகை செலவிடப்படாமல் இருப்பதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லியில் தெரிவித்தார்.
லோக்சபாவில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தமிழகம் மற்றும் கேரளா போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், நிபந்தனைகள் மற்றும் தாமதங்கள் மூலம் நிதி முடக்கப்படுகிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், குறிப்பாக கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசு ஒதுக்கிய நிதியைப் பெற்றுக் கொண்டு பயன்படுத்துவதில்லை என கூறினார். தேசியப் பேரிடர் மீட்பு நிதியின் கீழ் ரூ.311.95 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக ரூ.72 கோடி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்தத் தொகையும் இதுவரை பயன்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தார்.




