ஏப். 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து தமிழகமெங்கும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை கட்டுப்படுத்தும் நோக்கில், ரூ.50,000-க்கு மேல் பணம் எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், மாநிலம் முழுவதும் நடந்த சோதனைகளில் இதுவரை ரூ.151 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நடத்தை விதிமீறல் தொடர்பாக சி-விஜில் செயலி மூலம் 794 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

புதிய வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு தபால் மூலம் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கணக்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.