வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் திறக்க வேண்டும்; இல்லையெனில் ஈரானின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
கடந்த மாதம் 28ம் தேதி அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக போர் தொடங்கிய நிலையில், அதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
சர்வதேச எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்துக்கு பயன்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு தொடங்கியதாகவும், பெட்ரோல்–டீசல் உள்ளிட்ட விலைகள் உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், போர் தொடர்பாக சமூக வலைதளங்களில் டிரம்ப் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை பதிவிட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஒருபுறம் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்ட அவர், மறுபுறம் 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ள போர்க்கப்பலை ஈரானுக்கு அனுப்பியதாகவும், மேலும் பொருளாதார தடைகளை தளர்த்துவது குறித்து பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சமீபத்திய பதிவில், உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு பயன்படும் ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால், ஈரானின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தாக்குதல் தொடங்கும் என டிரம்ப் கூறினார். இதற்கு பதிலாக, மின் நிலையங்கள், எரிசக்தி மற்றும் எரிபொருள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடந்தால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்றும், மேற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைப்போம் என்றும் ஈரான் எச்சரித்ததால், அப்பிராந்தியத்தில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.




