தமிழக வாழ்வுரிமை கட்சி (த.வா.க.) தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், த.வா.க. என்பது “அரசியல் தலைமைக் குழு” அடிப்படையில் இயங்கும் கட்சி என்றும், அதில் தமிழ்நாடு விடுதலைப்படை, மாவோயிஸ்ட் இயக்கங்கள், தமிழ்நாடு மீட்சிப்படை உள்ளிட்ட அமைப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார். அதனால் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

தி.மு.க.-க்கு குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையில் ஆதரவு அளித்ததாக கூறிய வேல்முருகன், அதை நிறைவேற்றுமாறு கேட்டபோது தி.மு.க. தரப்பு அலட்சியமாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டினார். வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு அமல்படுத்துவதிலும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதிலும் நடவடிக்கை இல்லை என்றும், முதல்வரை இயக்கும் உயர் ஜாதி ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்ட அதிகாரிகளே காரணம் என்றும் கூறினார்.

பரந்தூர் விமான நிலையம் வரவுள்ள பகுதியில் தி.மு.க. அமைச்சர் ஒருவர் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், எந்த அமைச்சர்கள் மற்றும் எந்த துறைகளின் செயலர்கள் தவறு செய்தனர் என்பதற்கான புள்ளி விவரங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி, அதை மக்களிடம் தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இறுதியாக மூன்று தொகுதிகள் கேட்டதாகவும், அதிக இடங்கள் பெறவே வேறு கூட்டணியை நாடவில்லை என்றும் அவர் கூறினார். பா.ஜ. கூட்டணியில் த.வா.க. இடம் பெறாது என்றும், தாம் முன்வைத்த 10 கோரிக்கைகளை ஏற்கும் தரப்புடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவதாகவும் வேல்முருகன் தெரிவித்தார்.