சென்னையில் கிறிஸ்தவ பாதிரியார்கள், போதகர்களுடன் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் தலித் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளையும் மத்திய அமைச்சர்கள் சந்தித்து பேச உள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பா.ஜ.க.வை “மதவாத கட்சி” என்றும், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், தலித் மக்களுக்கு எதிரான கட்சி என்றும் மக்கள் மத்தியில் பொய் பிரசாரம் செய்கின்றன என அந்த வட்டாரங்கள் குற்றம்சாட்டின. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினர்.

இந்த திட்டங்கள் குறித்த தகவல்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சென்று, தி.மு.க.வின் பிரசாரத்தை முறியடிக்கும் முயற்சியாக மத்திய அமைச்சர்கள் தமிழகம் வந்து பல்வேறு தரப்பினரின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக பா.ஜ.க. தரப்பு தெரிவித்தது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற தமிழக பா.ஜ.க. சிறுபான்மையினர் அணி நிகழ்ச்சியில், மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் போதகர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சிறுபான்மையினருக்கான மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்களை தமிழகத்தில் பெறுவதில் தி.மு.க. தடைகள் ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், மத்திய அமைச்சர்கள் ராம்தாஸ் அத்வாலே மற்றும் ஜிதன்ராம் மஞ்சி உள்ளிட்டோர் தமிழகத்திற்கு வந்து தலித் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்து, மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களை விளக்க உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.