வாஷிங்டன்: அமெரிக்காவின் சுதந்திர தினத்தின் 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு, வரும் ஜூலை 4ல் பிரமாண்ட கொண்டாட்டங்களை நடத்த வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளது.

விழாவை ஒருங்கிணைக்க தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 250 ஆண்டுகளில் நாட்டின் முன்னேற்றம், ஜனநாயக மதிப்புகள் மற்றும் எதிர்கால இலக்குகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதே இந்த கொண்டாட்டத்தின் நோக்கம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நினைவு ஆண்டை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயங்கள் மற்றும் தபால் தலைகளை வெளியிட அமெரிக்க நுண்கலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இறுதி அளவுகள் முடிவானதும் நாணயம் அச்சிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருவூலத் துறை அதிகாரி பிராண்டன் பீச் கூறியதன்படி, 24 காரட் தங்கத்தில் தயாரிக்கப்படும் இந்த நினைவு நாணயத்தின் ஒரு பக்கத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் உருவம் இடம்பெறும். மேஜை முன் சாய்ந்து, கைகளை இறுக மூடிய நிலையில் அவர் இருப்பது போல வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்க சட்டப்படி பதவியில் இருக்கும் அதிபரின் உருவம் அமெரிக்க பணம் மற்றும் சிறப்பு நாணயங்களில் இடம் பெறக் கூடாது என்ற விதிமுறை இருப்பதாகவும், ஆனால் இது புழக்க நாணயத்திலிருந்து வேறுபட்ட நினைவு வெளியீடு என்பதால் கருவூல செயலருக்கே இறுதி வடிவமைப்பு மற்றும் அச்சிடல் அனுமதி வழங்கும் முழு அதிகாரம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த நாணயத்தில் டிரம்ப் இடம் பெறுவது குறித்து ஜனநாயக கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.