சென்னை: த.வெ.க. சார்பில் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 115 பேரை இன்று தலைமையகத்துக்கு வருமாறு கட்சி தலைமை அழைத்துள்ளது.
வரவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிட உள்ளது. கட்சி டிக்கெட் கோரி விருப்ப மனு அளித்த நிர்வாகிகளில் இருந்து 115 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; இவர்களே முதற்கட்ட வேட்பாளர்கள் என கூறப்படுகிறது.
இவர்களுடன் கட்சி தலைவர் விஜய் இரண்டு கட்டமாக ஆலோசனை நடத்தி, வேட்பு மனு தயாரிக்க உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேட்பு மனுவுடன் இணைக்க வேண்டிய ஆவணங்களை சரிபார்ப்பதற்காக, இன்று பனையூர் த.வெ.க. தலைமையகத்துக்கு அனைவரும் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தலைமையகத்தில் சட்ட வல்லுநர்கள் குழுவிடம் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர். த.வெ.க. முதல்முறையாக தேர்தலில் களமிறங்குவதால், வேட்பு மனு தாக்கலில் தவறு ஏற்பட்டு நிராகரிக்கப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




