புதுடில்லி: மேற்காசிய பிராந்தியத்தில் நீடிக்கும் போர் காரணமாக கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, இந்தியாவில் வீட்டு மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பாதிப்பு, உலகளவில் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தை ஈரான் முடக்கியதுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து, எரிவாயு கிடைப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

நிலைமையை சமாளிக்க, மாற்றுப் பாதைகள் மற்றும் மாற்று வழங்குநர்கள் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு முன் 27 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 41 நாடுகளாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, கிடைக்கும் கையிருப்பில் அதிகமான நுகர்வோருக்கு எரிவாயு கிடைக்கச் செய்ய, வழக்கமான 14.2 கிலோ வீட்டு சிலிண்டருக்கு பதிலாக 10 கிலோ சிலிண்டர் வழங்கும் திட்டத்தை எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. 14.2 கிலோ சிலிண்டர் சராசரியாக 40 நாட்கள் வரை நீடிக்கும் நிலையில், 10 கிலோ சிலிண்டர் 25–30 நாட்கள் வரை நீடிக்கும் என கணிக்கப்படுகிறது.

எடையை குறைக்கும் பட்சத்தில் விலையும் அதற்கேற்றபடி குறைத்து, சிலிண்டர்களில் புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் வாய்ப்பும் பேசப்படுகிறது. ஆனால் நாடு முழுவதும் எதிர்ப்பு எழலாம் என்ற அச்சத்தால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், குறிப்பாக தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் சூழலில் இது சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்றும் தகவல் கூறுகிறது.