தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க “திமுகவை முழுமையாக புறக்கணிப்பதே ஒரே தீர்வு” என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் 13 வயது சிறுமிக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் பரத் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பரத் திமுக 139வது வட்ட துணை அமைப்பாளரும், திமுக வழக்கறிஞரணி நிர்வாகியுமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பாலியல் குற்றங்களில், குறிப்பாக சிறு குழந்தைகள் மீது நடைபெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் திமுகவைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். திமுக அரசு தங்கள்மீது நடவடிக்கை எடுக்காது என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சமூக விரோதிகளும் பாலியல் குற்றவாளிகளும் திமுகவின் நிழலில் இருப்பதால் சட்டம், காவல்துறை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மீது பயமின்றி நடப்பதாகவும், இதனால் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். குழந்தைகள் பாதுகாப்பு அனைத்துக்கும் மேலானது என வலியுறுத்தி, திமுகவை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.




