சீனாவில் ஓடும் லாரியிலிருந்து தப்பிய ஏழு நாய்கள், ஒன்றாகச் சேர்ந்து சுமார் 17 கி.மீ தூரம் பயணித்து மீண்டும் உரிமையாளர்களை சேர்ந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஜிலின் மாகாணத்தின் சாங்சுன் நகரில் உள்ள பரபரப்பான நெடுஞ்சாலையில் இந்த காட்சி பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த இந்த நாய்களை, நாய் இறைச்சிக் கடையுடன் தொடர்புடையவர்கள் லாரியில் அடைத்து கொண்டு சென்றதாகவும், அதிலிருந்து அவை தப்பியதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் அந்த நாய்கள் கூட்டமாகவே சாலைகளில் நகர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வெளியான வீடியோக்களில் கோர்கி நாய் வழிநடத்தியதாகவும், பயணத்தின் போது காயமடைந்த ஜெர்மன் ஷெப்பர்டை மற்ற நாய்கள் பாதுகாப்பாக உடன் அழைத்து வந்ததாகவும் காணப்படுகிறது.
இந்த குழுவில் காயமடைந்த ஜெர்மன் ஷெப்பர்ட், ஒரு கோர்கி, கோல்டன் ரெட்ரீவர்ஸ், லாப்ரடார்ஸ் மற்றும் பெக்கினீஸ் நாய்கள் இருந்ததாக கூறப்படுகிறது. வீடியோ எடுத்த சமூக வலைதள பயனர், பலமுறை உதவ முயன்றும் அவை அதை புறக்கணித்து ஒற்றுமையாக முன்னேறி இறுதியில் வீடு திரும்பியதாக தெரிவித்துள்ளார்.




