ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர் 2’ திரைப்படம், ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ என்ற பெயரில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் அதிரடி வசூலை பதிவு செய்துள்ளது. வர்த்தகத் தரவுகளின்படி, படம் இந்தியாவில் 5 நாட்களில் ரூ.519.12 கோடி நிகர வசூல் செய்துள்ளதுடன், உலகளவில் ரூ.800 கோடி வசூலை ஏற்கனவே கடந்துள்ளது.
மார்ச் 19 அன்று உலகமெங்கும் வெளியான இந்த தொடர்ச்சிப் படம், பாகிஸ்தானின் குற்றவியல்–பயங்கரவாத வலையமைப்புகளில் ஊடுருவும் இந்திய ராணுவ உளவாளியை மையமாகக் கொண்டது. கடந்த டிசம்பரில் வெளியான முதல் பாகம் பெரிய வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் நிகழ்கால சம்பவங்களுடன் இணைந்து பல விஷயங்களை நேரடியாக சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்ததாக கூறப்படுகிறது.
வெளியான முதல் நாளிலேயே படம் ரூ.102.55 கோடி வசூலித்து, இந்தியில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் பெற்றுள்ளது. மேலும், சாக்னில்க் என்ற வர்த்தக இணையதளம் தெரிவித்ததன்படி, மார்ச் 23 அன்று படம் ரூ.65 கோடி நிகர வசூலை பதிவு செய்துள்ளது; இறுதிப் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய நிகர வசூல் விவரம்: மார்ச் 19 – ரூ.102.55 கோடி, மார்ச் 20 – ரூ.80.72 கோடி, மார்ச் 21 – ரூ.113 கோடி, மார்ச் 22 – ரூ.114.85 கோடி, மார்ச் 23 – ரூ.65 கோடி; மொத்தம் ரூ.519.12 கோடி. இதே வேகம் தொடர்ந்தால், படம் அடுத்த இரண்டு நாட்களில் ரூ.1,000 கோடி மைல்கல்லை எட்டக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆதித்யா தர் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இப்படத்தில் ஆர். மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, டேனிஷ் பாண்டோர், சாரா அர்ஜுன், கவுரவ் கேரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து, ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிடப்படும் ‘அஸ்வத்தாமா’ படத்திலும் ரன்வீர் சிங்கையே நடிக்க வைக்க இயக்குநர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




