ஹைதராபாத் பேகம்பட் விமான நிலையத்தின் ஓடுதளத்தின் கீழ், உலகிலேயே முதன்முறையாக வாகனப் போக்குவரத்துக்கான நிலத்தடி சாலை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருவதாக தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சட்டசபை கேள்வி நேரத்தில் பேசிய அவர், டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்கள் காற்று மாசு, மோசமான வடிகால் அமைப்பு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் தினசரி பாதிப்புகளை சந்திப்பதாக குறிப்பிட்டார். ஹைதராபாத் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருப்பினும், உரிய சீர்திருத்த நடவடிக்கைகள் இல்லையெனில் எதிர்காலத்தில் இதே போன்ற சிக்கல்கள் உருவாகலாம் என்றும் எச்சரித்தார்.

அந்த நிலை ஏற்படாமல் தடுக்கும் வகையில், பேகம்பட் விமான நிலைய ஓடுதளத்தின் கீழ் இந்த நிலத்தடி சுரங்கப்பாதை அமைக்கப்படுவதாக அவர் கூறினார். விமான ஓடுதளத்தின் கீழ் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் உலகில் வேறு எங்கும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்துக்காக இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து அனுமதி பெற்றுள்ளதாகவும், மத்திய அரசின் சம்மதத்துடன் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாகவும் முதல்வர் கூறினார். மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் இருந்து நகரத்துக்குள் வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை இது குறைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

1937ல் தொடங்கப்பட்ட பேகம்பட் விமான நிலையம் தற்போது ராணுவ பயன்பாட்டில் உள்ளதாகவும், அங்கிருந்து பயணியர் விமான சேவை இயக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.