ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது சகோதரி, ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா இடையிலான பல கோடி ரூபாய் குடும்ப சொத்து தகராறு மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதில் தாய் ஒய்.எஸ். விஜயம்மா, ஷர்மிளாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து, சொத்து பகிர்வில் அநீதி நடந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

2009-ல் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்குப் பிறகு, முறையான உயில் இல்லாததால் குடும்ப சொத்துகள், தொழில்கள் உள்ளிட்டவை குறித்து தகராறு உருவானதாக கூறப்படுகிறது. விஜயம்மா, சொத்துகள் இன்னும் முறையாகப் பிரிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஜெகன் முன்வைக்கும் வாதங்கள் தவறானவை என்றும் திசைதிருப்புவதாகவும் விஜயம்மா கூறினார். மேலும், ஜெகனின் இரண்டு குழந்தைகளுக்கும், ஷர்மிளாவின் இரண்டு குழந்தைகளுக்கும் சமமாக சொத்துகளைப் பகிர வேண்டும் என்றும், பெங்களூரில் உள்ள எலகங்கா நிலம் (மதிப்பு சுமார் ரூ.300 கோடி என கூறப்படுகிறது) முழுமையாக ஷர்மிளாவுக்கே சொந்தம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் ‘சரஸ்வதி பவர் அண்டு இண்டஸ்ட்ரீஸ்’, ‘கேபிடல் ரியாலிட்டி’ உள்ளிட்ட சொத்துகளும் இடம்பெறுகின்றன. மேலும், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை கண்காணிப்பில் இருப்பதால், அவற்றை விற்பதோ அல்லது மாற்றுவதோ தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி குறிப்பின்படி, சில ஆண்டுகளுக்கு முன் ஜெகன் மற்றும் அவரது மனைவி பாரதி, ‘சரஸ்வதி பவர்’ நிறுவன பங்குகளை பரிசு பத்திரம் மூலம் ஷர்மிளா மற்றும் விஜயம்மாவுக்கு மாற்றியதாகவும், பின்னர் அதை செல்லாது என அறிவிக்கக் கோரி ஜெகன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பாயம் அந்த பரிசு பத்திரத்தை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. அந்த உத்தரவுக்கு எதிராக தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விஜயம்மா மேல்முறையீடு செய்துள்ள நிலையில், வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது; தீர்ப்பு ஷர்மிளாவுக்கு சாதகமாக இருந்தால் ஜெகனுக்கு அரசியல் மற்றும் நிதி ரீதியாக பின்னடைவு ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜெகனின் ஆதரவாளர்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடு திரைமறைவில் ஷர்மிளாவுக்கு உதவுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.