நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான அரசியலமைப்பு பொது வாக்கெடுப்பில் தோல்வியை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில், பிரதமராகத் தொடர்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மார்ச் 22 மற்றும் 23 தேதிகளில் நடைபெற்ற இந்த கருத்து வாக்கெடுப்பு, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் பணிக்காலப் பிரிவினை உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் குறித்து மக்களின் கருத்தை அறிய நடத்தப்பட்டது. எதிர்பார்த்ததை விட அதிகமாக, 58 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுப்பதிவு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
வாக்கெடுப்பு முடிவில் அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு 46.5% ஆகவும், எதிர்ப்பு 53.5% ஆகவும் பதிவானது. இதன் மூலம் நீதித்துறை சீர்திருத்த முன்மொழிவு தோல்வியடைந்தது.
இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில், “இத்தாலியர்கள் முடிவெடுத்துவிட்டனர்; அந்த முடிவை மதிக்கிறோம்” என மெலோனி கூறினார். இந்த முடிவை, இத்தாலியை நவீனமயமாக்குவதற்கான ஒரு “நழுவிய வாய்ப்பு” எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த முடிவுகள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும், நடுநிலையை உறுதி செய்வதற்கும் இத்தாலியின் சீர்குலைந்த நீதி அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் தற்போதைய நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.




