மேற்காசியாவில் நிலவும் சூழ்நிலை மிகுந்த கவலை அளிப்பதாகவும், அது இந்தியாவுக்கு முன்னெப்போதும் இல்லாத சவால்களை உருவாக்கியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று லோக்சபாவில் தெரிவித்தார். கொரோனா காலத்தில் எடுத்த உறுதியுடன் இந்த நெருக்கடியையும் எதிர்கொள்ள வேண்டும் என்றும், இந்த சூழலை பயன்படுத்தி வதந்தி பரப்புவோர் வெற்றி பெற அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
ஈரான் தொடர்பான மோதல் தொடரும் நிலையில், எரிசக்தி விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தகப் பாதைகளில் முக்கியத்துவம் கொண்ட இந்தப் பிராந்தியத்தில் ஏற்படும் இடையூறு இந்தியாவையும் உட்பட பல நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி ஆகியோர் சபையில் விவரங்களை வழங்கியதாகவும், விரைவில் தீர்வு காண வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்களுடன் தானே நேரடியாக பேசி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியதாக மோடி கூறினார். எந்த பிரச்னைக்கும் போர் தீர்வாகாது என்றும், சர்வதேச கடல்வழிப் பாதைகளில் செல்லும் கப்பல்களுக்கு தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அந்தப் பகுதியில் சுமார் 1 கோடி இந்தியர்கள் வசிப்பதால், இந்தியர்களின் பாதுகாப்பே அரசின் முதன்மை நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இந்த மோதலில் சில இந்தியர்கள் உயிரிழந்ததாகவும், சிலர் காயமடைந்ததாகவும் கூறிய பிரதமர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார். அங்குள்ள இந்தியர்களுக்கு துாதரகங்கள் உதவி செய்து வருவதாகவும், போர் தொடங்கியதிலிருந்து 3.75 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
எரிசக்தி பாதுகாப்பு தொடர்பாக, நாட்டின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் தடைபடாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்து வருவதாகவும், எரிவாயு பிரச்னையை சமாளிக்க மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் மோடி தெரிவித்தார். எல்.பி.ஜி. தேவைகளில் 60% உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படுவதாகவும், உற்பத்தியை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஒரு தசாப்தத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.




