முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசின் தவறுகளை தற்போதைய மத்திய அரசு “கழுவி அகற்றும்” பணியில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 2004–2010 காலகட்டத்தில் வெளியிடப்பட்ட எண்ணெய் பத்திரங்களை அவர் இதற்குக் காரணமாக குறிப்பிட்டார்.
டில்லியில் நடைபெற்ற ஒரு டிவி சேனல் நிகழ்ச்சியில் பேசிய அவர், அந்த காலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்பாக பெரிய பிரச்னைகள் இருந்ததாக தெரிவித்தார். பொதுமக்கள் பிரச்னைகளை விட அதிகாரத்தைப் பற்றியே காங்கிரஸ் கவலைப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அப்போது ரூ.1.48 லட்சம் கோடி மதிப்பிலான எண்ணெய் பத்திரங்கள் வெளியிடப்பட்டதாகவும், இது எதிர்கால தலைமுறைகளை கடனில் ஆழ்த்தும் என எச்சரிக்கப்பட்டதாகவும் மோடி கூறினார். 2020க்கு பிறகு இந்த பத்திரங்களுக்கு திருப்பிச் செலுத்துதல் தொடங்கியதாகவும், வட்டியுடன் சேர்த்து ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக நாட்டுக்கு செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகளவில் குழப்பம் நிலவும் சூழலிலும் இந்தியா வளர்ச்சி பாதையில் முன்னேறி வருவதாகவும் பிரதமர் கூறினார். பிப்.28ல் போர் தொடங்கியதிலிருந்து கடந்த 23 நாட்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். டில்லி மெட்ரோவின் முக்கிய வழித்தடங்கள் தொடங்கி வைக்கப்பட்டதுடன், கோட்டாவில் புதிய விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
வளைகுடா நாடுகள் முதல் ஐரோப்பா வரை, வளர்ந்து வரும் நாடுகள் முதல் அண்டை நாடுகள் வரை இந்தியா நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக பார்க்கப்படுவதாக மோடி தெரிவித்தார். பல இடங்களில் போர்கள் நடக்கும் நிலையில், இந்தியாவின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பார்த்து பல நாடுகள் ஆச்சர்யப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.




