மேற்காசியாவில் நடைபெறும் போர் பேச்சுவார்த்தை மூலமே முடிவுக்கு வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ராஜ்யசபாவில் தெரிவித்தார். அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த மோதல் எரிசக்தி தொடர்பான கவலைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், வர்த்தக பாதைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் உரங்களின் வழக்கமான விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் உயிர் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு இந்தியாவுக்கு முக்கிய கவலையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதில் பல இந்திய மாலுமிகள் இருப்பதாகவும் மோடி கூறினார். சர்வதேச கடல் பாதைகளில் வணிகக் கப்பல்களுக்கு தாக்குதல் நடத்தப்படுவதும், அவற்றுக்கு தடைகள் விதிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அப்பாவி மக்கள் மற்றும் சிவில் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும் ஏற்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

போர் சூழலிலும் இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக கடப்பதை உறுதி செய்ய இந்தியா முயற்சி செய்து வருவதாகவும், அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு இருப்பதாகவும், கையிருப்பு திறனை மேலும் உயர்த்தும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.

இந்த போர் உலக பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதிலிருந்து மீட்பு பெற நேரம் எடுக்கும் என்றும் மோடி கூறினார். இந்தியர்களின் பாதுகாப்புக்கு நாடுகள் உறுதியளித்தாலும் சிலர் உயிரிழந்ததும், சிலர் காயமடைந்ததும் வருத்தமளிப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விவசாயிகளுடன் அரசு துணை நிற்கும் என்றும், போதுமான உரம் கையிருப்பு உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.