சென்னை: த.வெ.க. தலைவர் விஜய் அரசியல் கூட்டணிக்கான நம்பிக்கைக்குரிய நபராகத் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், தமிழக பா.ஜ. நிர்வாகிகளிடம் கூறியதாக பா.ஜ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்த வட்டாரங்களின் தகவலின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ) விஜயை இணைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்காக நேரடியாகவும், ஜெய் ஷா, பீயூஷ் கோயல் உள்ளிட்டோர் வழியாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இயக்குநர் அட்லீ வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும், “ஜனநாயகன்” பட வெளியீடு தொடர்பான பேச்சுகளுக்காகவும் விஜய் மும்பை சென்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அங்கு அவர் பீயூஷ் கோயலை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த சந்திப்பில் நடந்த உரையாடலை குறித்து தமிழக பா.ஜ. நிர்வாகிகளிடம் பேசிய கோயல், மும்பையில் விஜயை அழைத்து பேசி எத்தனை தொகுதிகள் வழங்க முடியும் என்பதுபோன்ற விவரங்களை தெரிவித்ததாக வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், அதற்கு பதிலாக விஜய் தொடர்பில்லாத விஷயங்களை பேசினார் என்றும், தன் சொன்னதை அடிக்கடி மாற்றி பேசுகிறார் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விஜய் கூட்டணியில் சேராவிட்டாலும் என்.டி.ஏ பலமாகவே இருக்கும் என்றும் கோயல் கூறியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.