புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் நேற்று நிறைவடைந்த நிலையில், ‘இண்டி’ கூட்டணிக்குள் குழப்பம் தீராததை உறுதிப்படுத்தும் வகையில் பல தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தனித்தனியாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க.-காங்கிரஸ் இடையே இடப்பங்கீடு உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், யார் கூட்டணியை வழிநடத்துவது என்ற விவகாரத்தில் உரசல் ஏற்பட்டதாகவும், பேச்சுவார்த்தைக்காக தி.மு.க. நிர்வாகிகள் காங்கிரஸ் அலுவலகத்துக்கு செல்லாததால் ஹோட்டலில் பேச்சு நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மொத்தம் 30 தொகுதிகளில் 17 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட, மீதமுள்ள 13 தொகுதிகளை தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை தி.மு.க. ஏற்காததால், மார்ச் 18 முதல் இரு கட்சிகளும் தனித்தனியாக வேட்புமனுத் தாக்கல் செய்யத் தொடங்கின.

இரு கட்சித் தலைமையின் அறிவுறுத்தலுக்குப் பிறகு, நேற்று முன்தினம் நள்ளிரவில் காங்கிரஸ் 16, தி.மு.க. 12, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் வி.சி.க. தலா ஒரு தொகுதி என முடிவு செய்யப்பட்டதாக தகவல். ஆனால் எந்தத் தொகுதி யாருக்கு என்ற பேச்சில், கடந்த தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட சில தொகுதிகளை காங்கிரஸ் கோரியதால் தி.மு.க. தரப்பு வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது.

வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி நாளில், இதுவரை மனுத் தாக்கல் செய்யாத சில தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்தனர். அதே நேரத்தில் காங்கிரசாரும் அனைத்து தொகுதிகளிலும் மனுத் தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் சிலர் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் என்பதற்கான ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களையும் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. தலைமைகள் மீண்டும் உடன்பாடு எட்டி மனுக்களை திரும்பப் பெறாவிட்டால், காங்கிரஸ்-தி.மு.க. நேருக்கு நேர் போட்டியிடும் சூழல் உருவாகலாம்.