சென்னை: ஊரக பகுதிகளில் வீடுகளுக்கான சொத்து வரி, கணக்கீட்டு குளறுபடிகளால் கடுமையாக உயர்ந்து வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொத்து வரி முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. பொதுவாக அந்தந்த பகுதியின் வாடகை வருவாய் நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு வரி கணக்கிடப்படுவதாக கூறப்படுகிறது. நிர்வாக நடைமுறை வசதிக்காக, ஊரக பகுதிகளில் இருந்த ‘வீட்டு வரி’ என்ற பெயரை ‘சொத்து வரி’ என மாற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசு உத்தரவிட்டது.

ஆரம்பத்தில் இது பெயர் மாற்றம் மட்டுமே என பலர் நினைத்த நிலையில், தற்போது கிராமங்களில் ‘சொத்து வரி’ என்ற பெயரில் வசூல் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நகரங்களில் இருப்பதைப் போல தெளிவான கணக்கீட்டு வழிமுறை இல்லாமல், முன்பு சென்ட், ஏர்ஸ் போன்ற நில அளவுகளை அடிப்படையாகக் கொண்ட முறையில் இருந்த வரி நிர்ணயம் மாற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கிராமங்களில் வீடு, கடைகளுக்கு குறைந்தபட்சமாக சதுர அடிக்கு ரூ.1 என்ற அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும் என்றாலும், பல இடங்களில் ரூ.1 முதல் ரூ.5 வரை வசூலிக்கப்படுவதாக தெரிவித்தனர். வாடகை வருவாய் அடிப்படையிலான எந்த வழிமுறையும் பின்பற்றாமல் விகிதம் நிர்ணயிக்கப்படுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். முன்பு வீட்டு வரியாக ரூ.50 செலுத்தியவர்கள் தற்போது ரூ.500 முதல் ரூ.5,000 வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பலருக்கு 100%க்கும் மேலான உயர்வு ஏற்பட்டதாகவும், வரி செலுத்தச் சென்றபோதுதான் பலருக்கு இது தெரியவருவதாகவும் அவர்கள் கூறினர்.