புதுடில்லி: ஹிந்து, சீக்கியர், பவுத்த மதங்களைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தினர் பிற மதத்திற்கு மாறினால், பட்டியல் இன சலுகைகள் மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த உரிமைகளை கோர முடியாது என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிந்தாதா ஆனந்த் தொடர்பானது. அவர் ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி மதப்போதகராக பணியாற்றி வருகிறார். தன்னை சிலர் தாக்கி, ஜாதி ரீதியான இழிசொற்களை பயன்படுத்தியதாக அவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அக்கலா ராமி ரெட்டி, ஆனந்த் மதம் மாறிய நிலையில் அவர் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் பாதுகாப்பை கோருவது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என வாதிட்டார். இதை ஏற்ற ஆந்திரா உயர்நீதிமன்றம், அந்தச் சட்டம் குறிப்பிட்ட சமூகங்களுக்கு பாதுகாப்பு வழங்க உருவாக்கப்பட்டதாகவும், மதமாற்றத்தின் மூலம் அந்தச் சலுகைகளை தொடர முடியாது என்றும் தெரிவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஆனந்த் தாக்கல் செய்த மேல்முறையீட்டை மார்ச் 24 அன்று நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வு விசாரித்து, உயர்நீதிமன்றத்தின் முடிவை உறுதி செய்தது. கிறிஸ்தவ மதத்தை வெளிப்படையாக ஏற்று நீண்ட காலமாகப் பின்பற்றி, போதகராகவும் செயல்பட்டு வருபவர் தொடர்ந்து பட்டியல் இன உறுப்பினராக இருந்து அந்தப் பாதுகாப்புகளை கோர முடியாது என நீதிமன்றம் குறிப்பிட்டது.