சென்னை: சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த பின்னர், திருத்தணியில் தனது பிரசாரத்தை தொடங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் நேரத்தில் “அண்டா, குண்டா, மிக்சி” போன்ற பொருட்களை வழங்கி மக்களை ஏமாற்ற முயற்சி நடக்கிறது என குற்றம்சாட்டினார்.

தன் உரையில், டாக்டர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், இத்தனை போராட்டங்கள் நடக்கும் நிலையில் “நல்லாட்சி” என கூறுவது சரியா என கேள்வி எழுப்பினார். மகளிருக்கு ரூ.5,000 வழங்குவது யார் பணத்தில் எனவும், பணம் கொடுத்து ஓட்டுகளை உறுதி செய்கிறார்கள் எனவும் அவர் கூறினார்.

மேலும், தனியார் பள்ளி, கல்லூரிகள் தரமாக இருக்க, அரசு பள்ளி, கல்லூரிகள் தரமற்றதாக இருப்பதாகவும், இதற்கு தகுதியற்றவர்களின் கையில் அதிகாரம் இருப்பதே காரணம் எனவும் விமர்சித்தார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய அவர், அரசு மருத்துவமனைகளின் தரம் குறைவாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

ஜாதி, மதம், பணம் அடிப்படையிலான அரசியலை விமர்சித்த சீமான், ஓட்டுக்காக பணம் அல்லது பரிசுப் பொருட்களை வாங்குவது தன்மான இழுக்கு என கூறினார். இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் நல்லாட்சி வர வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.