சென்னை: காலையில் கண் விழித்ததும் இரவு உறங்கும் வரை ஸ்மார்ட்போன் இல்லாமல் வாழ்க்கை நகராத நிலை உருவாகி விட்டது. ‘ஸ்மார்ட்’ உலகத்தில் வாழ்கிறோம் என்று பெருமைப்பட்டாலும், அதீத போன் பயன்பாடு மூளையின் செயல்பாட்டை மெல்ல மெல்ல மாற்றக்கூடும் என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
அதிக நேரம் திரையைப் பார்ப்பதால் கவனம் சிதறல், நினைவாற்றல் குறைவு, முடிவெடுக்கும் திறன் மங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, போனைத் திறப்பது, தொடர்ந்து ஸ்க்ரோல் செய்வது, சமூக வலைதள ‘லைக்’ போன்றவை மூளையில் டோபமைன் சுரப்பை தூண்டி, தற்காலிக மகிழ்ச்சியை உருவாக்கி மீண்டும் மீண்டும் போன் பார்க்கும் பழக்கத்தை வலுப்படுத்தும் என குறிப்பிடப்படுகிறது.
மேலும் கவனம், சுயக்கட்டுப்பாடு, முடிவெடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய ‘ப்ரீஃப்ரண்டல் கார்டெக்ஸ்’ பகுதி அதிக பயன்பாட்டால் பாதிக்கப்படலாம் என்றும் கட்டுரை கூறுகிறது. இதன் விளைவாக ஆழமாக கவனம் செலுத்த முடியாமை, மேலோட்டமாக யோசிக்கும் பழக்கம், சிறு விஷயங்களையும் மறக்கும் நிலை போன்றவை உருவாகலாம்.
‘உடனடி மகிழ்ச்சி’ தரும் ரீல்ஸ், சமூக வலைதள உள்ளடக்கங்கள் நீண்டகால இலக்குகள்—படிப்பு, வேலை, தூக்கம்—இவற்றை பின்னுக்கு தள்ளும் அபாயமும் குறிப்பிடப்படுகிறது. போன் திரைகளில் இருந்து வரும் ப்ளூ லைட் தூக்கத்தை கெடுப்பதோடு, நினைவகத்துடன் தொடர்புடைய ‘ஹிப்போகாம்பஸ்’ மீதும் தாக்கம் ஏற்படுத்தி பதற்றம் மற்றும் மறதியை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதிலிருந்து மீள 4 வார “மூளை ரீசெட்” திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது: முதல் 1–2 வாரங்களில் எப்போது, ஏன் போன் எடுக்கிறோம் (சலிப்பு/அழுத்தம்) என்பதை கவனிக்க வேண்டும். 3–4 வாரங்களில் காலை எழுந்ததும் ஒரு மணி நேரம் போன் தவிர்ப்பது, இரவில் போனை வேறு அறையில் வைப்பது, போன் எடுக்கத் தோன்றும் போது நடைப்பயிற்சி அல்லது மூச்சுப் பயிற்சி செய்வது போன்ற சிறு மாற்றங்கள் உதவும் என கூறப்படுகிறது. தேவையில்லாத நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்வது, ‘டிஜிட்டல் ஹைஜீன்’ கடைப்பிடிப்பது, உடற்பயிற்சி செய்வது ஆகியவையும் நிபுணர்கள் பரிந்துரைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.




