வாஷிங்டன்: ஈரான் மீது போர் தொடங்க அமெரிக்காவைத் தள்ளியது ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் தான் என அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா-இஸ்ரேல் தரப்பும் ஈரானும் இடையிலான மோதல் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில், ஈரான் மின்நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து திட்டமிடப்பட்டிருந்த அனைத்து ராணுவ தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதற்றம் யாரால் தொடங்கியது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
மோதல் எவ்வாறு உருவானது என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இஸ்ரேல் ஏற்கனவே தாக்குதல்களுக்கு தயாராக இருந்ததாகவும், அதனால் அமெரிக்காவும் இதில் இழுக்கப்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
மெம்பீஸ் நகரில் நடந்த வட்டமேசை கலந்துரையாடலில் பேசிய டிரம்ப், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியது ஹெக்செத் என தெரிவித்தார். மத்திய கிழக்கில் உள்ள பிரச்னையை இப்போது தீர்க்கலாமா அல்லது தள்ளிப்போடலாமா என்று தான் கேட்டதாகவும், ஈரானை அணுகுண்டு தயாரிக்க அனுமதிக்கக் கூடாது; தாக்க வேண்டும் என்று ஹெக்செத் கூறியதாகவும் டிரம்ப் கூறினார்.
இதற்கு முன், போர் தொடங்கியதற்கான காரணங்களை டிரம்ப் பல விதமாக விளக்கியிருந்தார். ஒரு கட்டத்தில், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எனவும், மற்றொரு சந்தர்ப்பத்தில், பரந்த பிராந்திய மோதலைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன எனவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.




