புளோரிடா: ஈரானின் “முன்னணி தலைவர்” ஒருவருடன் அமெரிக்கா உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், யாருடன் பேசுகிறோம் என்பதை அவர் வெளியிட மறுத்தார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதற்கு முன், பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது நடத்த திட்டமிட்ட தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக டிரம்ப் கூறியிருந்தார்.

ஆனால், அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்த பேச்சுகள் ஈரானின் ஆட்சியாளராக கூறப்படும் மொஜ்தபா கமேனியுடன் அல்ல என வலியுறுத்தினார். மேலும், அவரை தலைவராக தான் கருதவில்லை என்றும், அவர் உயிருடன் உள்ளாரா என்பது தெரியவில்லை என்றும் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரேட் குஷ்னர் ஈடுபட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்; மேலும், “மிகவும் மதிக்கப்படக்கூடிய” ஈரான் தலைவருடன் தான் பேசுகிறோம் எனவும் கூறினார்.